இந்தியா

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்பு

webteam

கர்நாடகாவில், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சி கடும் தோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க, பாஜக முயற்சிப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா ஆகியோர் ஈடுபட்டனர். 

பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு செல்வதை தடுக்க, அவர்கள் 2 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. கர்நாடக ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.