நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத் தை கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு நாட்கள் நடந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஆளும் கூட்டணி, வேண்டுமென்றே வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக பாஜக உறுப்பினர்கள் குற்றஞ் சாட்டியதோடு, ஆளுநரிடமும் முறையிட்டனர்.
வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் 2 முறை முதல்வருக்கு கெடு விதித்தார். இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளுநர் விதித்த கெடு தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்தார். இச்சூழலில் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, இன்று மாலை 5.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுயேச் சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர், நாகேஷ் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவசர வழக்காக இன்று அதை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளதாக அவகாசம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.