கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச் சார்பற்ற ஜனதா தள கூட்டணி 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும் எனவும், அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அங்கு மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இதனிடையே கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கர்நாடகா முதலமைச்சர் ஒரு எழுத்தர் போல பணியாற்றுவதாக செய்திகள் வெளியாகுகின்றன என சுட்டிக்காட்டி பேசினார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் குமாரசாமி பேசும்போது, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலையீட்டால் தன்னால் முதலமைச்சராக வேலை பார்க்க முடியவில்லை எனவும் ஒரு எழுத்தர் போன்று பணியாற்றுவதாகவும் பேசியிருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன என சுட்டிக் காட்டி பிரதமர் மோடி பேசினார்.
இதனிடையே பிரதமர் மோடியின் பேச்சுக்கு கர்நாடாக முதல்வர் குமாராசமி மறுப்பு தெரிவித்துள்ளார். தான் ஒருபோதும் அதுபோன்று பேசவில்லை எனக் கூறியுள்ள குமாரசாமி, பிரதமர் மோடி பொய் சொல்வதாகவும் கூறியுள்ளார். முன்னதாக விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரத்திலும் தன்னுடையே பேச்சை பிரதமர் மோடி தறவாக சித்தரித்ததாகவும் குமாரசாமி சாடியுள்ளார். அத்துடன் கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச் சார்பற்ற ஜனதா தள கூட்டணி 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும் எனவும், அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் குமாரசாமி தெரிவித்தார்.