இந்தியா

”என் சாவுக்கு டாக்டர்தான் காரணம்” - முடி உதிர்தலால் விரக்தியடைந்த இளைஞர் விபரீத முடிவு

Sinekadhara

இப்போது ஆண்கள், பெண்கள் என அனைவருமே சருமம் மற்றும் முடி போன்றவற்றை பராமரித்து பேணி காப்பதில் கவனம் செலுத்திவருகின்றனர். அதற்காக இயற்கை வழி மட்டுமல்லாமல் பல ஆயிரங்கள் லட்சங்கள்கூட செலவுசெய்ய தயாராக உள்ளனர். சில நேரங்களில் தனக்கு பொருந்தாத சிகிச்சை முறைகள் அல்லது தவறான சிகிச்சை முறைகளால் சிலர் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதை நாம் அவ்வபோது செய்திகளில் பார்க்கிறோம். அதுபோன்றதொரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. முடி உதிர்தலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் தலைமுடி மற்றும் புருவம் கூட இழந்த இளைஞர் ஒருவர் விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார்.

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்தான் தனது தற்கொலைக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த பிரசாந்தின் குடும்பத்தினர் அதிர்ந்துபோயுள்ளனர்.

பிரசாத்திற்கு முடி கொட்டுதல் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டுவரை தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துவந்த பிரசாந்திற்கு முடிகொட்டுதல் பிரச்னை நிற்கவில்லை. ஆனால் அதற்கு நேர் எதிராக தலைமுடி மட்டுமல்லாமல் புருவ முடியும் சேர்ந்து கொட்டிவிட்டது. இதனால் மனம் நொந்த பிரசாந்த் வீட்டை விட்டு வெளியே செல்லவே தயங்கி, வீட்டிற்குள்ளேயே இருந்துவந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விரக்தியில் உச்சத்திற்கே சென்ற பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய தற்கொலை குறிப்பில், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரஃபீக் தவறான மருந்து மாத்திரைகளை கொடுத்ததுதான் தனது இந்த நிலைக்கு காரணம் என்றும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரசாந்தின் குடும்பத்தார் அதோலி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால் காவல்துறையின் விசாரணை தங்களுக்கு திருப்திகரமாக இல்லை என கூறுகின்றனர். இதுகுறித்து குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ரஃபீக்கிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பிரசாந்த் ஒரு வித்தியாசமான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு சரியான சிகிச்சைமுறையைத்தான் அவர் பரிந்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.