மாம்பழங்களின் அரசன் எனப்படும் அல்போன்சா மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் அல்போன்சா ரக மாம்பழங்கள் விளைகிறது. புகழ்பெற்ற இந்த ரக மாம்பழங்களை, மாம்பழங்களின் அரசன் என்று குறிப்பிடுவார்கள். ஹபஸ் என்றும் குறிப்பிடப்படும் இவை உலக அளவில் புகழ்பெற்றவை. இவை ஜப்பான், கொரியா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் ஆகும்.
’நாங்கள் தேவ்காட் பகுதியில் விளையும் ஹபஸ் மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு கடந்த 8-9 வருடமாக போராடி வருகிறோம். ரத்ன கிரி, சிந்துர்பர்க் பகுதியில் விளையும் அல்போன்சா மாம்பழத்துக்கு தனியாக குறியீடு கேட்டு போராடி வந்தனர். அதையும் இதையும் ஒன்றாக்கி இப்போது புவிசாய் குறியீடு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். தேவ்காட் பகுதி ஹபஸ் மாம்பழங்களுக்கு தனியாக அங்கீகாரம் கேட்கலாமா வேண் டாமா என்பது குறித்து விரைவில் கூடி முடிவு செய்வோம்’ என்று தேவ்காட் தாலுகாவைச் சேர்ந்த மாம்பழ விவசாய அமைப்பு ஒன்றின் ஆலோ சகர் நிரஞ்சன் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டார்ஜீலிங் டீ, முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு இந்த அங்கீகாரத்தைப் பெற்றது. மொத்தம் 325 பொருட்கள் இந்தியாவிலிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.