கேரள மாநிலத்தில் காய்த்த பலாப்பழம் ஒன்று உலக சாதனை படைக்க உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது எடமுலக்கல். இந்தப் பகுதியில் விவசாயம் பார்த்து வரும் விவசாயி ஜான்குட்டி. இவரது தோட்டத்தில் உலகின் கனமான மற்றும் மிக நீளமான பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது. ஆகவே இவர் இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இவரது தோட்டத்தில் காய்த்திருக்கும் இந்தப் பலாப்பழம் 97 சென்டிமீட்டர் நீளமும் 51.5 கிலோ எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது பற்றிப் பேசிய ஜான்குட்டி, "இந்தப் பலாப்பழம் பெரிதாகத் தெரிகிறது. நான் ஒரு சாதனைப் பதிவுக்கு முயற்சிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் இது குறித்துத் தேடியபோது, இதற்கு முன்னதாக கனமான பலாப்பழம் ஒன்று 42.72 கிலோ எடையில் புனேவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நான் கின்னஸ் உலக சாதனைக்கும் லிம்கா புத்தகத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்" என்றார்.
இதற்கிடையில், கின்னஸ் உலக சாதனை குறித்துக் கிடைக்கும் வலைத்தள தகவலின்படி, புனேவில் உள்ள 'ஜாக்ஃப்ரூட் கம்பெனியுடன்' தொடர்புடைய ஒரு பண்ணையில் 42.72 கிலோ எடையும் 57.15 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பலாப்பழம் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 ஜூன் 2016 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே கேரள விவசாயியும் அவரது குடும்பத்தினரும் இந்தப் பலாப்பழத்தின் மூலம் புதிய உலக சாதனை படைப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.