சிட் நிதி மோசடியை நீர்த்துப்போகச் செய்த கொல்கத்தா காவல்துறை கமிஷ்னர் தற்போது தலைமறைவாக உள்ளார் என மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குவங்க அரசு 2013 ஆண்டு சிட் நிதி மோசடியை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்தக் குழுவிற்கு ராஜீவ் குமார் தலைமை வகித்தார். இந்தச் சிறப்பு விசாரணை குழு சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் நிதி மோசடியை விசாரிக்க அமைக்கப்பட்டது.
இக்குழுவிற்கு தலைமை வகித்த ராஜீவ் குமார், இந்த மோசடியை விசாரணையை மிகவும் தாமதப்படுத்தியதாகவும் இந்த மோசடியை நீர்த்துபோகச் செய்யும் விதமாக செயல்பட்டதற்காகவும் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு இவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனால் ராஜீவ் குமார் மத்திய புலனாய்வு அமைப்பின் ‘உடனடி கைது’ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரியவந்தன. அத்துடன், கொல்கத்தாவில் நடந்த தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திலும் ராஜீவ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதனால் சிட் நிதி மோசடியை நீர்த்துப்போகச் செய்த கொல்கத்தா காவல்துறை கமிஷ்னர் ராஜீவ் தற்போது தலைமறைவாக உள்ளார் என மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “கொல்கத்தா காவல்துறை கமிஷ்னர் விடுப்பில் உள்ளார். தேர்தல் ஆணையம் மாநில அரசை 3 ஆண்டுகளுக்குமேல் ஒரே பதவியிலிருக்கும் காவல்துறையினரை பணியிடைமாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. நாங்கள் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதனை வரும் பிப்ரவரி 15 அல்லது 20 ஆம் தேதிக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்திவிடுவோம். ஏன் இந்த வேலைகளை முடிக்கவில்லை என தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியதால், நடைமுறையை விளக்கி காலதாமதத்திற்கு அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளோம்”என்று தெரிவித்தார்.