வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து அவருக்கு தண்டனை குறித்த விவரங்களை, ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தவிர, ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றவாளிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கொல்கத்தா காவல் துறை விசாரணை நடத்தி இருந்தால், குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும். ஆனால் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தனது அரசு உயர் நீதிமன்றத்தை அணுகும்” எனத் தெரிவித்திருந்தார்.
தீர்ப்புக்குப் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்காததால் வங்காள மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரே தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு சாமானியர்கள் எதிர்பார்த்தப்படி வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் பாஜக எம்பி கமல்ஜீத் செஹ்ராவத், "நீதிமன்றம் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளித்தது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற வழக்கில், உண்மைகளை முன்வைப்பது மாநில அரசின் வேலை. மாநில அரசு இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்று குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ரேகா சர்மா, "இந்த வழக்கில் மம்தா அரசு முழுவதுமாக ஈடுபட்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இல்லாவிட்டால், விளைவு முற்றிலும் மாறுபட்டிருக்கும்" என்றார்.
மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், “குற்றவாளிக்கு மிக உயர்ந்த தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். என்றாலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நான் எதுவும் கூற முடியாது. அதேநேரத்தில் இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என்பதை மேற்கு வங்க பொதுமக்கள் நம்பவில்லை. கொலை வழக்கில் இன்னும் விசாரணை ஆழமாக இருந்திருக்க வேண்டும். சஞ்சய் கூறுவதுபோல, காவல்துறையினரும் மற்றவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.