இந்தியா

மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பு : சிகிச்சையின்றி இறந்த முதியவர்

webteam

கொல்கத்தாவில் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்துவிட்டதால் புற்றுநோய் பாதிப்புக்கொண்ட 70 வயது முதியவர் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் அனுமதிக்கப்படுவதை தவிருங்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை எனப்படுகிறது.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் வெளிநோயாளிகளை அனுமதிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு, பல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள இண்டகாஃப் சவுத்திரி என்ற மருத்துவரின் உறவினர் தான் அந்த 70 வயது முதியவர். புற்றுநோயின் தீவிரத்தால் முதியவரின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த சவுத்திரி, அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்துள்ளார்.

ஆனால் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலமுறை முயற்சிக்குப் பின்னர் ஒரு பல்நோக்கு மருத்துவமனை முதியவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்திருக்கிறது. ஆனால் அதற்குள் அந்த முதியவர் உயிரிழந்துவிட்டார்.

இதேபோன்று நசிம்மா காதுன் என்ற பெண்மணி கிட்னி பாதிப்பு மற்றும் டையாபிடிஸ் காரணமாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முயற்சித்திருக்கிறார். ஆனால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் அவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.