கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றில் குதித்து சாகசம் செய்ய முயன்ற மேஜிக் மேன் மாயமானதை அடுத்து, அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த மேஜிக் மேன் சன்சால் லஹிரி. 41 வயதான இவர் பல்வேறு மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். இவர் உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஹேரி ஹைதினி’ என்ற எஸ்கேப் கேம் மேஜிக்கை நேற்று செய்துள்ளார். அதன்படி, கை கால்களை கட்டி ஆற்றில் குதித்து உள்ளே இருந்து மீண்டும் வெளியே வரவேண்டும்.
ஹைவுரா பாலத்தின் 28வது தூணிற்கு அருகில் இருந்து கங்கை நதியில் லஹிரி இன்று குதித்துள்ளார். அவர் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டதோடு அல்லாமல், கை, கால்களையும் கயிறால் கட்டிக் கொண்டார். குதிக்கும் முன்பாக, “இதனை நான் சரியாக செய்தால் அது மேஜிக். இல்லையென்றால் அது எனக்கு சோகமான முடிவு” என்று கூறியுள்ளார் லஹிரி. அவர் படகில் சென்று ஆற்றில் குதித்ததாகவும், கிரேனில் ஆற்றில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் ஆற்றில் குதிக்கும் நிகழ்ச்சியை காண ஹவுரா பாலத்தில் பொதுமக்கள் பலரும் திரண்டுள்ளனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு வந்தனர். உள்ளே குதித்த அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை.
அதனால், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். “அவரை தடுக்க நாங்கள் எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. பின்னர், எங்கள் நீச்சல் அதிகாரிகள் அவர் குதித்த இடத்தை தேடத் தொடங்கினர். ஆனால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை நேரம் என்பதால் ஆற்றின் உள்ளே ஒரே இருட்டாக இருந்ததால் தேடுவதை நிறுத்திவிட்டோம்” என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். நீண்ட நேரம் வராததால் லஹிரி இறந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதனால், அவரது சடலத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2013ம் ஆண்டும் இதேபோல், ஆற்றுக்குள் குதித்து சாகசம் செய்துள்ளார். அப்போது, அவர் தங்களை ஏமாற்றுவதாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து உதைத்துள்ளனர். 6 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே சாகசத்தை நிகழ்த்துவதாக ஆற்றில் குதித்தவர் இன்னும் வெளியே வரவில்லை.