வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவமே இன்னும் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில், இதோ இன்னொரு சம்பவம் அங்கு அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் 25ஆம் தேதி, தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் மோனோஜித் மிஸ்ரா (31), தற்போதைய மாணவர்கள் புரோமித் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் கூறும் நிலையில், கொல்கத்தா காவல்துறை ஐந்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.
முக்கியமாக, இந்த வழக்கில் மோனோஜித் மிஸ்ரா மீது பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், நாசவேலை மற்றும் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான மோனோஜித் மிஸ்ரா திரிணாமுல் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆகையால், ”அவர் இந்த வழக்கில் இருந்த தப்பக்கூடும்” என தகவல்கள் பரவிய நிலையில், ”ஆனால் இந்த தண்டனையிலிருந்து யாரையும் பாதுகாக்காது” என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் சூடுபிடித்துள்ளது.
மோனோஜித் மிஸ்ராதான் இந்த வழக்கில் மிக முக்கியமான நபர் என விசாரணையில் கண்டறியப்பட்டாலும், அவருக்கு இது முதல் குற்றமல்ல எனத் தெரிய வந்துள்ளது. அவர் மீது ஏற்கனவே ஹிஸ்ட்ரி ஷீட் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒருகாலத்தில் சட்டத்துறையில் ஆர்வமுள்ள மாணவராக இருந்த மோனோஜித், 2007ஆம் ஆண்டு கொல்கத்தா கல்லூரியில் சேர்ந்தார். 2012ஆம் ஆண்டு தனது படிப்பை முடிப்பதற்கு முன்பே அதை பாதியில் நிறுத்தினார். பின்னர், 2017ஆம் ஆண்டு மீண்டும் சேர்க்கை பெற்று 2022இல் தேர்ச்சி பெற்றார். அவரது சுயவிவரம் அவரை ஒரு ’குற்றவியல் வழக்கறிஞர்’ என்று விவரிக்கிறது.
அலிப்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றும் மோனோஜித் மிஸ்ரா, 2017 முதல் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமுல் கல்லூரி சத்ரா பரிஷத்தின் கல்லூரிப் பிரிவை வழிநடத்தி வருகிறார். நண்பர்களால் ’மாம்பழம்’ என்று அழைக்கப்படும் மோனோஜித், வளாகத்தில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளதாகவும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள்கூட அவருக்கு அஞ்சும் அளவுக்கு இருப்பதாகவும் கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர். தகவல்களின்படி, கடந்த காலங்களில் அவர் மீது பல துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2017ஆம் ஆண்டு, கல்லூரியின் முதல்வர் அலுவலகத்தில் நடந்த ஒரு நாசவேலை சம்பவத்தில் மோனோஜித் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் திரிணாமுல் கட்சி, கல்லூரியின் கட்சிப் பிரிவைக் கலைத்தது. இதையடுத்து, மோனோஜித் அதிகாரப்பூர்வமாக எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் பட்டம் பெற்ற ஒரு வருடம் கழித்து, கல்லூரியில் ஒரு சாதாரண எழுத்தர் ஊழியராகச் சேர்ந்தார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அறிக்கைகளின்படி, அவர் தனது பணிக்கு ஒருநாளைக்கு ரூ.500 பெறுகிறார்.
"மோனோஜித் தாதா எங்கள் இதயங்களில் இருக்கிறார் (டீம் எம்எம்)" என்று கொல்கத்தா சட்டக் கல்லூரியின் சுவர் கிராஃபிட்டியில் எழுதப்பட்டுள்ளது. இது வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்குப் பிறகு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ’தி டைம்ஸ் ஆஃப்’ செய்தியின்படி, கல்லூரி வளாகத்தில் மாணவிகளிடம் மோனோஜித் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை ’துய் அமே பியே கோர்பி’ என்பதாகும். (அதாவது, என்னை திருமணம் செய்து கொள்வாயா). வளாக பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய அந்த 24 வயது பெண்ணிடமும், முதல்முறை சந்தித்தபோது மோனோஜித் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, மோனோஜித்துக்கு மிகவும் பயந்து சில மாணவிகள் கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மோனோஜித் பெண் மாணவிகளின் படங்களை எடுத்து, அவற்றை மார்பிங் செய்து, வாட்ஸ்அப் குழுக்களில் பரப்புவார் என்று கல்லூரி மாணவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளனர். பின்னர் அவரும், அவரது கும்பலும் அவர்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தி, வளாகத்தில் கிசுகிசுப்பார்கள். இதுகுறித்து யாராவது கேட்டால், தனக்கு உயர்மட்டம் வரை ஆள் இருக்கிறது. ஆகையால் தனக்கு எதுவும் நடக்காது என்று மோனோஜித் வெளிப்படையாகச் சொல்வதுடன், தன்னைப் பற்றி புகார் சொல்பவர்களை அவர் மிரட்டியதாகவும், அவர்களில் சிலரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
மோனோஜித்தின் தந்தை ராபின் மிஸ்ரா, காளிகாட்டில் ஒரு பாதிரியாராக உள்ளார். மேலும் அவரது தாயார் நரம்பியல் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார். தனது மகனுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்காக மிகவும் கடினமாக உழைத்ததாகவும், ஆனால் அரசியலில் அவர் ஈடுபட்டதாலும், அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாலும் உறவுகளை முறித்துக் கொண்டதாகவும் ராபின் மிஸ்ரா நேர்காணல்களில் கூறியுள்ளார். அதேபோல், ‘பாபாய்’ என்ற புனைபெயர் கொண்ட மோனோஜித், அடிக்கடி குடிபோதையில் சண்டையிடும் ஒரு நபர் என்று அண்டை வீட்டார் கூறுகின்றனர். சில தகவல்கள்படி, அவருக்கு ஒரு காதலியும், ஒரு நெருங்கிய வழக்கறிஞரும் இருந்ததாகவும், அவர்கள் அடிக்கடி அவரைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.