இந்தியாவில் எத்தனையோ சட்டங்கள் உருவாக்கப்பட்டபோதும், இன்னும் பெண்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களும் வரதட்சணைக் கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டிருப்பது என்பது வேதனையான விஷயமாக உள்ளது. அதேநேரத்தில், சமீபகாலமாக ஒருசில பெண்கள் சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது வரதட்சணை மற்றும் வன்முறை புகார் அளித்து வருவது அதிகரித்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் உபியைச் சேர்ந்த நபர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை குறித்த புகார் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவர் வீட்டில் மனைவி, தன் தோழியை தங்கவைத்ததன் விவகாரம் விவாகரத்து போய் உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு, கடந்த 2005ஆம் ஆண்டு நபத்விப்பில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள், இருவரும் கொல்கத்தாவில் உள்ள நர்கெல்டங்கா பகுதியில் வசித்து வந்துள்ளனர். அதன் பின்னர், கணவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கவே, அமிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோலாகாட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு, கணவரின் அனுமதியில்லாமல் மனைவி, தன் தோழியைத் தங்கவைத்துள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இல்லற வாழ்வுக்காவும் கணவர் நெருங்கியுள்ளார். ஆனால், அதிலிருந்தும் அவரது மனைவி விலகியுள்ளார். மேலும், அவருடைய தாயாரையும் தோழியையும் கவனித்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டியுள்ளார்.
இதனால் வெறுத்துப்போன கணவர், விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்குப் போட்டியாய் மனைவி, கணவர் மீது உள்ளூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அப்போது, கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கும் விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து கணவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய விஷயம், மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பதுதான். தவிர, கணவர் விவாகரத்து கோரிய பின்னர்தான் மனைவி இந்தப் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார்; புகார் அளித்திருக்கிறார். மேலும், மனைவிக்கு தாம்பத்ய உறவிலும், குழந்தையைப் பெற்றுக்கொள்வதிலும் விருப்பமில்லை என்று தெரிய வந்திருக்கிறது. எனவே, இது கொடுமையாகவே பாவிக்கப்படுகிறது” என உத்தரவிட்டு, கணவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.