வடமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான சீடர்களை கொண்டவர் குர்மீத் ராம் ரஹிம். இவர் வழக்கமான சாமியார்களில் இருந்து மாறுபட்டவர். இந்த நவீன காலத்து சாமியார் பாடகர், நடிகர், எழுத்தாளர், தொழிலதிபர் பன்முகத்தன்மை கொண்டவர்.
திரைநட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் இப்படி ஒரு என்ட்ரி கொடுக்கும் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆம் தேதி தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். முற்றும் துறந்த துறவிகளைப்போல இல்லாமல் இவர் வண்ணமயமான வாழ்க்கையை கொண்டிருந்தார்.
ஆன்மீக குரு, கொடையாளர், பாடகர், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என தனது பன்முகத்தன்மையை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இவர் சாகச பைக் பிரியர்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த குர்மீத்தை அவரது ஏழு வயதில், தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் ஷா சட்னம் சிங்-ஆல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங்கை ஷா சட்னம் அறிவித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்துள்ள குர்மீத்துக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் நடித்த குர்மீத், அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெள்ளித்திரையின் சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் சாகசங்களை தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தும் குர்மீத், 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள் உட்பட 53 சாதனைகளை செய்ததாக குறிப்பிடப்படுகிறார்.
பல்லாயிரக்கணக்கான சீடர்களை கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங், பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். 2002-ல் கொலை குற்றத்தில் தொடர்பு, 2014-ல் தனது சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வைத்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய குர்மீத், 2002-ல் பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.