ஆப்ரேஷன் "MELON" என்ற சோதனை நடவடிக்கையில் 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட “கெட்டாமெல்லன்” என்று அழைக்கப்படும் கும்பலின் முக்கிய நபரான கொச்சினைச் சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (NCB) கைது செய்துள்ளது.
சென்னையில் கெட்ட மலன் எனப்படும் சர்வதேச "டார்க்நெட் வெப்" போதைப்பொருள் விற்பனையாளர் மீது இரண்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டார்க்நெட் மூலமாக நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (NCB) தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மூலமாக சர்வதேச அளவில் யாரும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதற்கான பணப்பரிவுத்தனை என பல்வேறு விதமாக நடைபெற்று வருவதை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்டுபிடித்தது.
இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய டார்க்நெட் போதைப்பொருள் விற்பனையாளராக இருந்த “Ketamelon” எனும் பெயரில் செயல்பட்ட போதைப்பொருள் கும்பலின் முக்கிய நபரான கொச்சினை சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
ஆப்ரேஷன் "MELON" எனும் பெயரில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கொச்சின் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த சோதனையில் 1,127 எல்எஸ்டி பிளாட்கள் மற்றும் 131.66 கிராம் கெட்டமைன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகளும் கைப்பற்றப்பட்டது.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி, கொச்சியில் மூன்று பார்சல்களில் வந்த 280 LSD பிளாட்கள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், இந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஜூன் 29-ம் தேதி சந்தேகப்படும் நபரான கொச்சினை சேர்ந்த எடிசன் பாபு வீட்டில் நடைபெற்ற சோதனையில், மேலும் 847 LSD பிளாட்கள் மற்றும் 131.66 கிராம் கெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், டார்க்நெட் மார்க்கெட்டுகளில் யாருக்கும் தெரியாமல் சர்வதேச கடத்தல் கும்பல் பேசிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் "KITES OS" உடன் கூடிய பென்டிரைவ், பல கிரிப்டோ வாலெட்டுகள், குற்ற ஆவணங்களை கொண்ட ஹார்ட்டிஸ்க், மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் கிரிப்டோகரன்சி வைத்திருந்த ஹார்ட்வேர் வாலெட்டும் கைப்பற்றப்பட்டது.
Binance போன்ற பிளாட்ஃபாரங்களில் வைத்திருந்த வாலெட்டுகள் ஆகியவற்றையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
"Ketamelon" இந்தியாவில் நான்காவது நிலையில் உள்ள டார்க்நெட்டில் செயல்படும் போதைப்பொருள் கும்பலாக இருந்து வந்துள்ளது. Ketamelon என்ற பெயர் இந்த கும்பலுக்கு வருவதற்கு காரணம் ஆரம்பகட்டத்தில் Ketamine கடத்தல் அதிகமாக ஈடுபட்டதால் உருவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எல்எஸ்டி விற்பனையாளராக கருதப்படும் “Dr. Seuss” எனப்படும் "Tribe Seuss" குழுவின் யூ.கே விநியோகஸ்தரான "Gunga Din" மூலமாக போதைப்பொருள்களை பெற்றுக் இந்தியாவில் சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது
குறிப்பாக பெங்களூர், சென்னை, பெங்களூர், பட்னா, டெல்லி, ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற இடங்களில் LSD சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 600 பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட எல்எஸ்டி பிளாட்களின் சந்தை மதிப்பு ரூ.35.12 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு பிளாட் ரூ. 2,500 முதல் 4,000 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2023-இல், “Zambada” என்ற டார்க்நெட் LSD சிண்டிகேட்டை என்.சி.பி. கண்டுபிடித்தது. அப்போது 29,013 எல்எஸ்டி பிளாட்கள், 472 கிராம் MDMA மற்றும் ரூ51.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
டார்க்நெட் போதைப்பொருள் விற்பனையாளர்கள், விற்பனை செய்யும் போதைப்பொருள்களின் தரம் மற்றும் வாடிக்கையாளர் அடிப்படையில் டார்க்நெட் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து ஒன்று முதல் ஐந்து வரை வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது
LSD என்பது “Lysergic Acid Diethylamide” எனும் ஹாலுசினஜெனிக் போதைப்பொருளாகும். இது வாசனை, நிறம், ருசி ஆகியவற்றின்றி காணப்படுவதால் எளிதாக காகிதங்களில் பூசி, “பிளாட்”, “ஸ்டாம்ப்” போன்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. இது உணர்வுகளை மாற்றி, போதையை ஏற்படுத்துகிறது.
சென்னையில் டார்க் நெட்டில் மிகப்பெரிய சர்வதேச போதைப் பொருள் விற்பனையாளரான கொச்சினை சேர்ந்த எடிசன் பாபு மீது இரண்டு வழக்குகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.