டெல்லியில், I-N-D-I-A கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து’I-N-D-I-A’ கூட்டணியை அமைத்தன. ஆனாலும், இது மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் ’I-N-D-I-A’கூட்டணி தோல்வியைத் தழுவியது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவை கடுமையாக எதிர்த்த, இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகளே மாநிலத்தில் பெருத்த தோல்வியைச் சந்தித்திருந்தன. இந்த நிலையில்தான், ஒருங்கிணைப்பு மற்றும் முக்கிய அரசியல் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய பேச்சுகள் எழுந்தன. அதன்படி, இக்கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, வைகோ, ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட 23 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR), வாக்காளர் உரிமை பறிப்பு மற்றும் 'தேர்தல் திருட்டு' எனக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பாக இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத எதிர்க்கட்சிக் கூட்டணி ஒருமனதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அந்தக் கடிதம் விரைவில் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கார்கே கூறினார். அவரது மேற்பார்வையின்கீழ் நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கூட்டணி ஒருமனதாகக் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "25 கட்சிகளின் பங்கேற்புடன் I-N-D-I-A கூட்டணிக் கூட்டம் நிறைவடைந்தது. அனைவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, நாங்கள் ஐந்து முக்கிய அம்சங்களில் ஒருமித்த கருத்தை எட்டினோம். இந்தப் பிரச்னைகளுக்காகப் போராடுவோம், அவற்றில் பணியாற்றுவோம், மேலும் முன்னேறிச் செல்வோம் என்று இன்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்றார்.
அதேநேரத்தில், கூட்டணி தொடர்பாக சில கட்சித் தலைவர்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதன்படி, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, ”I-N-D-I-Aஅணியின் செயல்பாடுகள் குறித்த தங்கள் கட்சியின் கவலைகளை காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்துள்ளோம். அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்” என்றார்.
ஆர்எல்டி தேசிய செயலாளர் அனுபம் மிஸ்ரா, ”உத்தரப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சி கூட்டணி நீடிப்பது சாத்தியமில்லை. அது வெறும் 'காகிதத்தில்' மட்டுமே உள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பல விஷயங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தியில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.