இந்தியா

கேன்சரே இல்லாத பெண்ணிற்கு புற்றுநோய் சிகிச்சை - வாழ்வை இழந்தவர் கதறல்

Rasus

கேரளாவில் புற்றுநோய் பாதிக்கப்படாத பெண்ணுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்மணி ரஜனி. இவரை நம்பி இவரின் வயதான பெற்றோர்களும், 8 வயது பெண் குழந்தையும் உடன் உள்ளனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜனிக்கு, மார்பகத்தில் லேசான கட்டி போல ஏதோ இருந்துள்ளது. இதனையடுத்து கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அதனை காண்பிப்பதற்காக ரஜனி சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கட்டியின் இரண்டு மாதிரிகளை பரிசோதனைக்கான எடுத்துள்ளனர். அதில் ஒன்றை அருகிலுள்ள தனியார் சோதனை கூடத்திற்கு மற்றொன்றை அதே மருத்துவமனையின் லேப்புக்கும் அனுப்பியிருக்கின்றனர்.

இதனிடையே தனியார் லேப்புக்கு அனுப்பப்பட்ட சோதனை முடிவுகள் வெளியானது. அதில் அப்பெண்ணுக்கு கேன்சர் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி சிகிச்சை எடுக்க அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி அப்பெண்ணுக்கு ஹீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஹீமோதெரபி சிகிச்சையால் அப்பெண்ணுக்கு முடியும் கொட்ட ஆரம்பித்தது.

இரண்டு வாரங்கள் ஆன நிலையில், அதே மருத்துவமனை லேப்புக்கு அனுப்பப்பட்ட மற்றொரு சோதனை முடிவு வெளியானது. அதில் அப்பெண்ணுக்கு கேன்சர் இல்லை என சொல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து குழப்பம் அடைந்த மருத்துவர்கள், பெண்ணுக்கு அளித்து வந்த ஹீமோதெரபி சிகிச்சையை உடனடியாக நிறுத்தினார். இதனையடுத்து மீண்டும் அப்பெண்ணிடம் இருந்து கட்டியின் மாதிரிகள் சேகரிப்பட்டு அது பரிசோதனைக்கான அனுப்பப்பட்டது. வெளியான முடிவுகள் அனைத்தும் அப்பெண்ணுக்கு கேன்சர் இல்லை என்பதையே உறுதி செய்தது.

இதனையடுத்து கேன்சரே இல்லாமல் தனக்கு கேன்சருக்கான சிசிக்சை அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பெண் கேரள சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் அளித்தார். தலையில் உள்ள முடி அனைத்தும் உதிர்ந்துவிட்டதால் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அப்பெண் கூறினார். இதனையடுத்து இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க சுதாகாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.