இந்தியா

மத்திய அரசு வாக்குறுதி : வயநாடு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்

webteam

வயநாடு மாவட்டத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாரவிதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக சுல்தான் பத்தேரி - குண்டல்பேட்டை சாலை உள்ளது. இந்தச் சாலை பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேர போக்குவரத்துக்கு தடை அமலில் உள்ளது. இந்தப் பாதைக்கு மாற்றுப்பாதை அமைக்க உள்ளதால், இரவு தடை மட்டுமின்றி ஏன் முழுநேர தடை விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனால் சுல்தான் பத்தேரி - குண்டல்பேட்டை சாலையின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து சாலைப்போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என வயநாடு மாவட்ட இளைஞர்கள் அமைப்பு சார்பாக கடந்த 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து தடை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக வனத்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் சாலை போக்குவரத்து விவகாரத்தில் நல்ல தீர்வு பெற்றுத்தரப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.