இந்தியா

கேரளா: இருவேறு இடங்களில் யானை தாக்கியதால் இருவர் உயிரிழப்பு: அச்சத்தில் மக்கள்

கேரளா: இருவேறு இடங்களில் யானை தாக்கியதால் இருவர் உயிரிழப்பு: அச்சத்தில் மக்கள்

kaleelrahman

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள, பாலப்பிள்ளி மற்றும் குந்தை ஆகிய பகுதிகளில் ரப்பர் டேப்பிங்கிற்கு சென்ற தொழிலாளர்களை யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

பாலப்பிள்ளியைச் சேர்ந்த சைனுதீன் என்பவர் எலிகோடு பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தீடீரென யானை முன்னால் வந்துள்ளது. பயத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த சைனுதீனை சுமார் 100 மீட்டர் தூரம் காட்டுக்குள் இழுத்துச் சென்ற யானை, காலால் மிதித்துக் கொன்றது.

இதேபோல் குந்தை ரப்பர் எஸ்டேட்டில் சுங்கலைச் சேர்ந்த பீதாம்பரன் என்ற தொழிலாளி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது யானை வருவதைக் கண்டு அவர் ஓட முயன்றார். ஆனால், அவரை பின்தொடர்ந்த யானைகள் பீதாம்பரனைத் தாக்கியுள்ளது. இதையடுத்து பீதாம்பரன் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருச்சூரில் அடுத்தடுத்து யானை தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையின் அலட்சியம் காரணமாக கடந்த ஓராண்டில் இதுவரை யானை தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.