நீதிமன்றத் தீர்ப்பு, சிறை twitter page
இந்தியா

மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கு | கேரள அரசு ஊழியருக்கு 111 ஆண்டுகள் சிறை.. ரூ.1.05 லட்சம் அபராதம்!

மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றம் 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Prakash J

கேரளாவில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 1 படித்து வந்த மாணவி ஒருவரை மனோஜ் என்பவர் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, மனோஜ் சிறப்பு வகுப்பு எடுத்து வந்துள்ளார். அந்த நிலையில்தான் அவர் பாதிக்கப்பட்ட மாணவியை வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயேகம் செய்துள்ளார். மேலும் அதை தன்னுடைய செல்போனிலும் படம்பிடித்ததுடன், தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன அவர், சிறப்பு வகுப்புக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மறுபுறம், அந்த மாணவியை, தனது கணவர் கொடுமைப்படுத்தியதை அறிந்த மனோஜின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், இதுகுறித்த வழக்கில் திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குழந்தையின் பாதுகாவலராக இருக்க வேண்டிய மனோஜ், கருணை காட்டாத குற்றத்தை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 1.05 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஒருவேளை, அவர் அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே கேரளாவில் தனது சொந்த பேத்தியையே பாலியல் வன்புணர்வு செய்த தாத்தாவுக்கும் 111 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.