இந்தியா

சபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்!

webteam

சபரிமலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள் சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற் காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

இந் நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.  பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். 

இதற்கிடையே, இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவி கே.பி.சசிகலா (56) சபரிமலைக்கு நேற்று சென்றார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சசிகலா அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் சசிகலாவை கைது செய்தனர். இவரது கைதை கண்டித்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.