மீ டூ-வில் தெரிவிக்கப்படும் புகார்கள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளது என்று கேரள நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் தைரியமாக வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பரவி வந்த இந்த மீ டூ தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது எழுப்பிய பாலியல் புகாரால் மீ டூ பிரபலமானது. சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்து இதை சின்மயி வெளியிட்டதால் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. மேலும் பலர் ஆதரவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மீ டூ புகார்கள் குறித்து நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார். “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. மீடூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு ட்ரெண்ட். ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. எந்தவொரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல.. வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.