இந்தியா

புற்று நோயாளியை 3-வது மாடிக்கு ஏறவைத்த சார் பதிவாளர்: உயிரிழந்ததால் அதிகாரி சஸ்பெண்ட்

புற்று நோயாளியை 3-வது மாடிக்கு ஏறவைத்த சார் பதிவாளர்: உயிரிழந்ததால் அதிகாரி சஸ்பெண்ட்

webteam

(கோப்பு புகைப்படம்)

கேரளாவில் ஆம்புலன்ஸில் இருந்த புற்றுநோயாளியை மாடிப்படிக்கட்டு வழியாக ஏறவைத்த சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் 6-ஆம் தேதி புற்றுநோயாளியான சனீஷ் என்பவரின் சொத்துக்களை அவரது மனைவி பெயருக்கு மாற்றுவதற்காக, சனீஷ் அவரது உறவினர்களால் ஆம்புலன்ஸ் மூலம் கேரள மாநிலம் கட்டப்பனா அரசு  அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் கருணாபுரம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சனிஷீன் உறவினர்கள் ஆகியோர் ஆம்புலன்ஸில் வைத்தே சொத்துப் படிவங்களை மாற்ற சார்பதிவாளர் ஜெயலட்சுமியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை மறுத்த ஜெயலட்சுமி சனீஷை தான் இருக்கும் மூன்றுவாது கட்lடத்துக்கு வரச் சொல்லியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய சனீஷ், சக்கர நாற்காலி மூலம் மூன்றாவது மாடியில் இருந்த சார் பதிவாளரை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கு அடுத்த நாள் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து சனீஷிடம் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்ட சார்பதிவாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கேரள பொதுப்பணிதுறை அமைச்சர் ஜி சுதாகரன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளப் பதிவில் “ மரணப்படுக்கையில் இருந்த ஒரு நோயாளியிடம் இரக்கமற்று நடந்து கொண்டு, அந்தத் துறைக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சார் பதிவாளருக்கு எதிரான விரிவான விசாரணையை மேற்கொள்ள வரித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டேன். பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கு உதவும் வண்ணம் கனிவாக பணியாற்றுகின்றனர். ஆனால் சனீஷ் போன்ற ஊழியர்கள், மக்களிடம் கனிவற்று நடப்பதை அரசு ஒரு போதும் அனுமதிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.