தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக போலி முகவரி மூலம் கேரள மாணவர்கள் விண்ணப்பத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், தமிழக அரசு மற்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலை ஆராந்து பார்த்ததில், 9 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார். கேரளாவில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைப்பது கடினம் என்பதால், அவர்கள் தமிழகத்தில் போலியான இருப்பிட முகவரி பெற்று விண்ணப்பத்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதேபோல் மற்ற மாநிலத்தவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவைப் பெற்ற சென்னை காவல் ஆணையர், புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.