இந்தியா

கேரளா: அச்சு அசலாக பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற ஸ்ரீதேவி ஆலய திருவிழா!

webteam

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் - பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த கோவிலுக்கு வந்து பெண்கள் போல் வேடமணிந்து சமைய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் போல் வேடமணிந்து கொள்ளை அழகுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான மேக்கப் கலைஞர்களும் அந்த பகுதியில் குவிந்தனர்.

வேண்டுதலுக்காக வருபவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்கு வரும் ஆண்கள், பெண்கள் போல் அழகாக அலங்காரம் செய்து கையில் விளக்குடன் கோவிலை வலம்வருவர்.

தன்னுடன் வரும் தனது மனைவியே தன்னை பார்த்து ஆச்சரியம் அடையும் அளவில் இவர்கள் அலங்காரம் இருக்கும். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள் மேல் மரியாதையும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.