இந்தியா

பொன்.ராதாகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்த எஸ்.பி.யதீஷ் சந்திரா பணி இடமாற்றம்

webteam

சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணுடன் சென்றவர்களின் வாகனத்தை அனுமதிக்க மறுத்த எஸ்பி யதீஷ் சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் தேதி மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டுடன் சபரிமலை சென்றார். நாகர்கோவிலில் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, நிலக்கல் பகுதியில் வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார்.அப்போது வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனக் கூறி பொன்.ராதாகிருஷ்ணுடன் சென்றவர்களின் வாகனங்களை அனுமதிக்க எஸ்பி யதீஷ் சந்திரா மறுத்தார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் வண்டியை மட்டுமே அனுமதிக்க முடியும் அவருடன் வருபவர்கள் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீசாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரை எஸ்.பி. அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, களியக்காவிளையில் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், யதீஷ் சந்திரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்வபவத்திற்கு பின் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உளவுத்துறை ஐஜி அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.