கேரள மாநிலம் ஆலப்புழா அருகே லைபீரியாவைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்கு கப்பலானது கடந்த மே 25-ம் தேதி கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 184 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
கவிழ்ந்த சரக்கு கப்பலில் 640 கொள்கலன்கள் இருந்ததாகவும், அதில் 12 கொள்கலன்கள் ஆபத்தானவை என்றும் கூறப்பட்டதால், அந்தப் பகுதியில் பயணம் செய்யும் அனைத்து கப்பல்கள் மற்றும் மீனவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் கடற்கரையில் கொள்கலன்கள் கரைஒதுங்கினால் அவற்றை தொடக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது லைபீரியா கப்பல் கவிழ்ந்த விபத்தானது மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு கப்பலில் இருந்த கொள்கலன்களிலிருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளதால், இந்த விபத்தை பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு.
மேலும் கப்பலில், 12 கொள்கலன்களில் தீப்பற்றக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதால் வெடித்துசிறும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச கடல்வழி சட்டங்களின் கீழ் இழப்பீடு தரப்பட வேண்டும் என மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்திடம் கேரள அரசு முறையிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.