இந்தியா

‘துபாயிலிருந்து வந்து 7 நாட்கள் ஊரை சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா’: கேரளாவுக்கு புது சவால்

‘துபாயிலிருந்து வந்து 7 நாட்கள் ஊரை சுற்றித்திரிந்தவருக்கு கொரோனா’: கேரளாவுக்கு புது சவால்

webteam

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் 7 நாட்கள் கேரளாவில் சுற்றித்திரிந்து திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதால் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் சென்ற பகுதிகளைக் கண்காணிப்பது கேரள அரசுக்குப் பெரிய சவாலாக தற்போது மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளக் கேரள முதல்வர் பினராயி விஜயன், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, வறுமை ஒழிப்புத் திட்டமான குடும்ப ஸ்ரீ மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், ஒத்துழைப்புமே கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் எனக் கூறும் வேளையில் துபாயிலிருந்து திரும்பிய ஒருவரால் கேரள அரசு தற்போது செய்வதறியாது நிற்கிறது. துபாயிலிருந்து கொரோனா தொற்றுடன் வந்த அந்த நபர் 7 நாட்கள் கேரளாவின் பல பகுதிகளுக்கும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

47வயதான அந்த நபர், மார்ச் 11ம் தேதி துபாயில் இருந்து கேரளாவில் வந்து இறங்கியுள்ளார். மார்ச்11 முதல் மார்ச் 17 வரையில் அவர் 3 மாவட்டங்களுக்குப் பயணம் செய்துள்ளார். இந்த 7 நாட்களில் திருமண நிகழ்வுகள், துக்க நிகழ்வு என அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் மசூதிக்குச் சென்று தொழுகை செய்துள்ளார். குழந்தைகளுடன் கால்பந்து விளையாடியுள்ளார். அவர் சொந்த ஊரில் உள்ள கிளப்களுக்கு சென்றுள்ளார். அவருக்கு மார்ச் 17ம் தேதியே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 7 நாட்கள் அவர் 1400க்கும் மேற்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தற்போது கேரள அரசுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அவர் பயணம் செய்த அனைத்து இடங்களையும் அம்மாநில அரசு தற்போது கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் பொது இடங்கள், நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் பல இடங்களிலிருந்துள்ளதால் அவர்கள் அனைவரையும் அடையாளம் காண்பது சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் பயணம் செய்த இடம் குறித்த மொத்த தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்துத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அந்த நபர் பயணம் செய்த இடங்களைக் கண்காணிப்பது பெரிய சவாலாக உள்ளது. உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்வது ஒரு தனிநபரின் பொறுப்பாகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று நாங்கள் எச்சரித்தோம். ஆனால் ஒரு சிலர் எங்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.