இந்தியா

சபரிமலையில் அக்.21 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை - கேரளா அரசு அறிவிப்பு

JustinDurai
சபரிமலையில் வரும் 21ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கேரளா வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மலையாளத்தின் துலா மாதப்பிறப்பையொட்டி, 16ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடப்பதாக இருக்கிறது. அதன்பின் பக்தர்கள் தரிசனத்துக்காக 5 நாட்கள் அதாவது 21ம்தேதி வரை நடை திறந்திருக்கும். ஆனால், பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதாலும் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை பாதிப்பு காரணமாக இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் வரும் 21ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கேரளா வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்துள்ளார்.