இந்தியா

கேரளாவில் கனமழையால் 6 பேர் உயிரிழப்பு: 10 மாவட்டங்களில் ரெட் அலர்ட்

JustinDurai

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு மாவட்டங்களிலும் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன,  

கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரப்பள்ளி அருவிக்கு அருகேயுள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட யானை, போராடி தானாகவே கரை திரும்பியது.

இதனிடையே கேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவிருந்த மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கேரளா: கரையேற முடியாமல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த காட்டு யானை