இந்தியா

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் ஆய்வு

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் ஆய்வு

rajakannan

கேரளாவில் மழை வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் 6 பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்எப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பினராயி விஜயன், மக்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். மாநிலக் காவல்துறையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ள பினராயி விஜயன், தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே இந்திய ராணுவத்தின் 40 குழுக்கள் இரவு பகலாகப் பணியாற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து முதியோர், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. கன்னூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மட்டுமல்லாது, பொறியாளர்கள் அடங்கிய மூன்று குழுவினர், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைத்தல், புதிய பாலங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். டெல்லியில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த ராஜ்நாத் சிங், பின்னர் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்தபடியே இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசிய ராஜ்நாத் சிங், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு வழங்கும் என உறுதியளித்தார்.