சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளை செல்ல இதுவரை எந்த பெண்ணும் அனுமதி கோரவில்லை என கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதைதொடர்ந்து ஐப்பசி பூஜை முடிவடைந்த நிலையில் மூடப்பட்ட நடை மண்டல பூஜைக்காக நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் நவம்பர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளை செல்ல இதுவரை எந்த பெண்ணும் அனுமதி கோரவில்லை என கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.