இந்தியா

கொச்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: 200 லாட்ஜ்களில் திடீர் சோதனை

JustinDurai

கொச்சியில் போதைப்பொருள் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் சட்டவிரோத போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லாட்ஜ்கள், ஓயோ அறைகள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள சுமார் 200 லாட்ஜ்கள் மற்றும் ஓயோ அறைகளில் போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீர் சோதனை நடத்தினர். இந்த ரெய்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தியதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டரை கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற ஷபீர் ஏஎஸ் என்பவரை களமசேரி போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அரை கிலோ கஞ்சாவுடன் ஜோசப் என்பவரை பனங்காடு போலீசார் கைது செய்துள்ளதாக கொச்சி போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், கொச்சி விமான நிலையத்தில் நேற்று ஆண் பயணி ஒருவர் செருப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள 1,068 கிராம் தங்கத்தை சுங்கத்துறையின் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.