இந்தியா

பாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்!

webteam

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 4 கன்னியாஸ்திரிகள், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜலந்தர் மறை மாவட்ட தேவாலய பேராயர், பிராங்கோ முல்லக்கல். கேரளாவைச் சேர்ந்த இவர் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் இருக்கும் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். கேரளா வந்திருந்த அவர், 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ் திரிக்கு ஆதரவாக அவருடன் தங்கியிருந்த 5 கன்னியா ஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒரு கன்னியாஸ்திரிக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டயம் தேவாலய நிர்வாகம், மற்ற நான்கு பேரையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. 

இந்த இடமாற்றத்தை ஏற்காத அந்த கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து அதே தேவாலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேவாலய நிர்வாகம் கூறியுள்ளது. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கவும், தங்களுக்குப் பாதுகாப்பு கோரியும் முதல்வர் பினராயி விஜயனுக்கு, கன்னியாஸ்திரிகள் அனுபமா, வி.ஜோசபின், அல்பி, அஞ்சிட்டா ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். 

தங்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருக்கிறது. தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், வழக்கு பாதிக்கும் என்றும் எங்களை பிரித்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவே இப்படி செயல்படுவதாகவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.