இந்தியா

பாலியல் வன்கொடுமை புகார்: பிஷப் பிராங்கோவுக்கு சம்மன் !

jagadeesh

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவரை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து பாலியல் புகாருக்குள்ளான பேராயர் பிராங்கோ பொறுப்பிலிருந்து வாடிகன் நிர்வாகத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக தன்னை ஜலந்தர் பேராயர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு கேரள மாநிலத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதன் பின்பு ஜாமீன் பெற்று, பஞ்சாப் சென்றுள்ளார் பிராங்கோ. இப்போது இவ்வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிராங்கோ நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று, அம்மாநில உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.