கேரளத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினரை, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கட்டியணைக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து, அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதல்வர் ரேஸில் ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன், கே.சி.வேணுகோபால் ஆகிய 3 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேரளத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினரை, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கட்டியணைக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைமையகத்தில் சட்டமன்றக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லம் சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணா அங்கு வருகை தந்தார். அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி அவரை வரவேற்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் செரியன் பிலிப் அவரைக் கட்டியணைக்க முயன்றார். இதனை விரும்பாத பிந்து, அவர் கட்டியணைக்க முயன்றதைத் தடுத்து கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்திற்கு பயனர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். பயனர்கள் பலரும், இந்தச் செயலை முறையற்றது எனக் கூறி, மூத்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளனர். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.