இந்தியா

கேரள தங்கக் கடத்தல்: சிக்குகிறாரா அமைச்சரின் மகன் ?

jagadeesh

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக அம்மாநில அமைச்சரின் மகன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் அமைச்சரின் மனைவி வங்கி லாக்கரை திறந்து ஆவணங்களை எடுத்துச் சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் ஸ்வப்னா சுரேஷூக்கு கமிஷனாக நாலரைக் கோடி ரூபாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த கமிஷன் தொகையில் இருந்து ஒரு கோடி ரூபாயை கேரள தொழிற்சாலைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் மகன் ஜெய்சனுக்கு, ஸ்வப்னா வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இது தொடர்பான விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெயராஜூக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மனைவி இந்திரா, கடந்த 12 ஆம் தேதி திடீரென வங்கிக்கு சென்று, லாக்கரில் இருந்த பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவர் வங்கிக்கு அவசரமாக செல்ல என்ன காரணம்? என பல்வேறு கேள்விகள் எழுந்திருப்பதால், வங்கியிடம் இருந்து சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு என்ஐஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.