கொச்சியில் சுற்றுச்சூழலுக்கான சட்ட விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய வழக்கில் சில கட்டடங்கள் சிக்கின. கொச்சியின் மராடு நகராட்சி பகுதிக்கு உட்பட்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்திலுள்ள ஒரு வீட்டின் சந்தை மதிப்பு 50 லட்சம் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஆகும். இந்த அடுக்குமாடி கட்டடம் நீர்நிலைகளை சுமார் 60 மீட்டர் அகலத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அவற்றை இடிக்க கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் இங்கு வசித்து வந்தவர்கள் காலி செய்யப்பட்டனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இன்று கொச்சி மராடுவில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து இடிக்கப்பட்டன.
9 விநாடிகளில் 17 மாடிக்கட்டடம் சரிந்து விழுந்தது. இதேபோல் நேற்று எச் 2 ஓ ஹோலி ஃபெய்த் மற்றும் ஆல்ஃபா செரீன் ஆகிய இரு கட்டடங்கள் அடுத்தடுத்து வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்தப் பணிகளை மும்பை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொண்டன.