மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பின், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவின் காசர்கோடை அடுத்த கனதுாரில் வசித்து வருபவர்கள், விஜயன் (44) மற்றும் அவரது மனைவி பேபி (37). இவர்களுக்கிடையே வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் இருவருக்குமிடையில் மீண்டும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. ஆத்திரமடைந்த விஜயன், தான் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியைக் கொண்டு மனைவி பேபியை சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்ததால் பேபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் விஜயன் வீட்டிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் நடந்த ஒரு நாள் முன்பு, வெள்ளிக்கிழமை அன்று, தனது மனைவியை ஒரு நபர் அடிக்கடி தொலைபேசியில் அழைப்பதாக விஜயன் ஆதூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். இப்புகார் குறித்து போலீசார் தம்பதியினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர். மறுநாள் காலையில் இந்த விவகாரம் தொடர்பாக கணவர் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அதன்பின்னர்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார் என்றும் விஜயனுக்கு நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.