பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. அதன்பேரில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதையடுத்து, மே 10ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமல் ஆனது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பிரதமர் அலுவலக (பிஎம்ஓ) அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த கேரளாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபர், ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் இருப்பிடம், எங்கே உள்ளது என்பன பற்றிய விவரங்களை தருமாறு கேட்டுள்ளார். அவரின் இந்த திடீர் பேச்சின் மீது சந்தேகம் கொண்ட கடற்படை தள அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அவர் கேரள மாநிலம் கோழிக்கோடுவைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான் எனத் தெரிய வந்துள்ளது. இவர், ராகவன் என்ற பெயரில் கொச்சியில் உள்ள கடற்படை கட்டளை தலைமையகத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம், யாருக்காக இந்த தகவல்களை அவர் விசாரித்தார்? வெளிநாட்டு உளவு அமைப்புடன் அவருக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பது பற்றி கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 'வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலாகும், இது முழுக்க முழுக்க நாட்டிற்குள் உருவாக்கப்பட்டது. இது செப்டம்பர் 2022இல் இயக்கப்பட்டது மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இந்த விமானம் தாங்கிக் கப்பலானது மிக்-29கே போர் விமானங்களின் இரண்டு படைப்பிரிவுகள் மற்றும் சுமார் 10 காமோவ் கா-31 ஹெலிகாப்டர்கள் உட்பட 40 விமானங்களை இயக்க முடியும். சமீபத்திய பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில்கூட இந்த விக்ராந்த் கப்பல் கராச்சி துறைமுகத்தில் சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.