இந்தியா

பசியுடனே உயிரிழந்த மது! கல்நெஞ்சையும் கலங்கவைத்த பார்வை..

webteam

கேரள மாநிலத்தில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் உடற்கூறு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் மது. பழங்குடி இனத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார். உணவுத் தேவைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு அருகில் இருந்த கிராமத்திற்கு சென்று அவர் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் செல்லும் அதே பாதையில் உள்ள கடைகளில் அரிசித் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அரிசியை எடுத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்குள் சென்ற மதுவை பார்த்த கடை உரிமையாளர்கள், அவர் தான் இத்தனை நாட்களாக அரிசியை திருடியதாக எண்ணி, மடக்கிப் பிடித்து அடித்துள்ளனர்.

அவர்கள் பிடிக்கும் போது மது சமைத்துக்கொண்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமைத்த உணவைக் கூட ஒரு வாய் சாப்பிடவில்லை, அதற்குள் கைகள் கட்டுப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கப்படும் போது பரிதாபமாக பார்க்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்தத் தாக்குதலில் மதுவின் உயிரே பிரிந்துவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அட்டப்பாடி போலீஸார், மதுவை தாக்கிய அனைவரையும் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் சிறையில் அடைத்துள்ளனர். உயிரிழந்த மதுவின் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது உடற்கூறு ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மதுவின் வயிற்றில் அரிசியோ அல்லது சோறோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. பல நாட்கள் சாப்பிடமால் இருந்த அவர், மிகவும் பலவீனமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதலில் அவர் படுகாயமடைந்திருப்பதும், மார்பு பகுதியில் எழும்பு முறிவுகள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.