கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அனேக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கியுள்ளது.
கேரளாவில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1,199 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
தொடர்ந்து அந்த பதவிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சராசரியாக 77 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து இன்று காலை மாநிலம் முழுக்க 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுக்க பரவலாக ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரிகளே அதிக இடங்களில் முன்னணியில் உள்ளனர். காங்கிரஸ் இரண்டாவதாக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. இதனால் பாரதிய ஜனதாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்.
காலை 11.00 மணி நிலவரப்படி 6 மாநகராட்சிகளில் 4ல் மார்க். கம்யூ, தலைமையிலான இடது சாரிகளும் 2ல் காங், கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. அதேபோல 86 நகராட்சிகளில் 36ல் இடதுசாரிகள், 40ல் காங்கிரஸ் கூட்டணியும், 3ல் பாரதிய ஐனதாவும் முன்னணியில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 10ல் இடது சாரிகளும் 4ல் காங், கூட்டணியும் முன்னணியில் உள்ளன.
152 ஊராட்சி ஒன்றியங்களில் 98ல் இடதுசாரிகளும் 53ல் காங்கிரஸ் கூட்டணியும் 1ல் பாரதிய ஐனதாவும் முன்னணியில் உள்ளன. 941 ஊராட்சிகளில் 444ல் இடது சாரிகளும் 354ல் காங்கிரஸ்சும் 32ல் பாரதிய ஜனதாவும் தொடர்ந்து முன்னணியில் உள்ளன.