prajith
prajith pt desk
இந்தியா

புலி தாக்கி இளைஞர் உயிரிழப்பு: புலியை சுட்டுக்கொல்ல வன உயிரின பாதுகாவலர் உத்தரவு

webteam

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள வாகேரி பகுதியை சேர்ந்தவர் பிரஜித். இவர் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு புல் அறுக்க நேற்று காலை சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இவரது சகோதரர் தேடிச் சென்ற நிலையில் பிரஜித் புலியால் கொல்லப்பட்டு, கால் பகுதியை புலி தின்ற நிலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும், இறந்தவருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், புலி ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

letter copy

இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய வனத் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு வனத்துறை அதிகாரிகள், உறவினர்களிடம் ஒப்படைக்க வந்தனர். ஆனால், புலியை சுட்டுக் கொன்றால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புலியை சுட்டுக் கொல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு காரணமான புலியை சுட்டுக் கொல்வதற்கான உத்தரவு, அந்த மாநில முதன்மை வன உயிரின பாதுகாவலர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் குறிப்பிட்ட புலியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றி மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த முயற்சி தோல்வியில் முடிந்தால், ஆட்கொல்லி புலி என அறிவித்து அதனை சுட்டுக் கொல்வதற்கும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.