இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடராக கேரள அரசு அறிவிப்பு

webteam

மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மூவருக்கும்
அம்மாநில அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார். மேலும், அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களிடமும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவை தாண்டி உலகின் பல நாடுகளிலும் பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம் செய்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.