கேரளாவில் பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்படுத்தலாம் என்று கேரள அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு கேரள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டயஸ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்றைய தினம் (18.6.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகள் ஆபத்தான பகுதி என்பதால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். மேலும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்காக, கடைகளில் பராமரிக்கப்படும் தனியார் கழிப்பறைகளை பொதுமக்களுக்குத் திறக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக மனுதாரரின் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் தெரிவிக்கையில், திருவனந்தபுரம் மாநகராட்சியும், வேறு சில உள்ளாட்சி அமைப்புகளும், சில சில்லறை விற்பனைக் கடைகளில் இருக்கும் கழிப்பறைகளை பொது கழிப்பறைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டியது.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் ஆலோசகர் சுமன் சக்ரவர்த்தி வாதிடுகையில், பெட்ரோல் பம்புகளில் பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகளை உறுதி செய்வது டீலர்களின் கடமை என்றும், டீலர்கள் அதைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வது எல்எஸ்ஜி துறையின் கடமை என்றும் வாதிட்டார்.
மேலும், 2013 ஆம் ஆண்டில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில், பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இருவரின் தரப்பையும் ஏற்றுக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஜெயகுமாரி என்பவர், காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறையை பயன்படுத்த சென்றிருக்கிறார். ஆனால், அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியகளை அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில், வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.