இந்தியா

"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..!

"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..!

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய முடியும் என்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த வருடம் அளித்தது. இதனையடுத்து இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. தீர்ப்புக்கு ஆதரவாக பல பெண்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அவர்கள் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு அறிவித்தது. பல இடங்களில் கலவரங்களும் நடைபெற்றன. இதனால் கடந்தாண்டு மண்டல பூஜை தரிசனத்தின்போது எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தது. ஆனால் நல்வாய்ப்பாக மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் சபரிமலையில் முடிந்து கோயிலின் நடை சாத்தப்பட்டது.

இதனையடுத்து கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தகவலை அண்மையில் வெளியிட்டது.

மிக முக்கியமாக சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றவேண்டும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “பழங்கால நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை சட்டத்தின் மூலம் காத்தால் அது நல்லதுதான். இவற்றை பாதுகாக்க பக்தர்கள் வீதியில் வந்து போராடத் தேவையில்லை. எனவே சபரிமலை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர்வது போல மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும் பட்சத்தில் மத்திய அரசு அவசர சட்டம் போடவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இவையெல்லாம் அரசியல் ரீதியாக ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மாதாந்திர கோயில் நடை திறப்பு பூஜைகள் எல்லாம் நடந்து வந்தன. சபரிமலை சாமி ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ஆம் தேதி மூடப்படும். அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். பின்பு டிசம்பர் 31-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இப்போது மீண்டும் சபரிமலை பரபரப்பு தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது "பக்தர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். "இருமுடிகட்டுக்குள்" பிளாஸ்டிக் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. இதனை பக்கத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மலைப் பாதைக்குள் மாலை 6 மணிக்கு மேல் செல்லக் கூடாது" என பேசியிருந்தார். ஆனால் கேரள சட்டசபை விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த பினராயி விஜயன் " உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்களை சபரிமலையில் வழிபாடு செய்ய அனுமதிக்க மறுப்பது, சட்டத்துக்கு எதிரான செயல்.அதேபோல சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வருவதும் சட்டப்படி சாத்தியமில்லா விஷயம்" என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய விஜயன் " சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. அதேபோல மாநில அரசு எந்தப் பெண்ணையும் சபரிமலைக்கு செல்ல வற்புறத்தவில்லை. பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது பெண்களின் விருப்பம்" என கூறினார். ஆனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருக்கும் மருத்துவ முகாம்களில் ஆண் மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.