கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மறைத்ததற்காக அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கேரளாவிற்குத் திரும்பும் பயணிகளை அம்மாநில அரசு கவனித்து வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை அறிந்து, அவர்களைப் பாதுகாப்பாகக் கையாண்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபியிலிருந்து பயணிகள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த அந்த 3 பேருக்கும் அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து அவர்கள் விமானத்தில் பயணித்துள்ளனர்.
திருவனந்தபுரம் வந்த பின்னர், அங்கிருந்து தனியார் பேருந்து ஒன்றின் மூலம் கொல்லம் வந்துள்ளனர். இதற்கிடையே அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை உடனே தனிமை வார்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்கள் மீது வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுடன் விமானத்தில் பயணித்த இரு சகபயணிகளுக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த 17 சிறுவர்கள் உட்பட 170 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.