கேரள சட்டசபை
கேரள சட்டசபை pt web
இந்தியா

1.15 நிமிடங்களில் உரையை முடித்து வெளியேறிய கேரள ஆளுநர்! இந்திய சட்டப்பேரவை வரலாற்றில் குறுகிய உரை!

Angeshwar G

கேரள மாநிலத்தில் ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் கையெழுத்திடாதது போன்ற விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தனது கொள்கை உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு கிளம்பிச் சென்றார். இதன் மூலம் ஆரிப் முகம்மது கானின் இந்த குறுகிய உரை நாட்டின் வரலாற்றில் இல்லாத குறுகிய ஆளுநர் உரையாகும்.

காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த ஆளுநர் 9.02 மணியளவில் தனது கொள்கை உரையை முடித்தார். மேடைக்கு வந்த ஆளுநர் தனது 62 பக்க உரையின் 136 பத்திகளில் கடைசி பத்தியை மட்டும் படித்து மீதியை தவிர்த்துவிட்டார். தொடர்ச்சியாக 9.04 மணியளவில் சட்டசபையைவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர் வந்ததும், சபைக்கு வெளியே சபாநாயகர் ஏஎன் ஷம்சீர், முதல்வர் பினராயி விஜயன், முதலமைச்சர் பினராயி விஜயன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஆளுநர் தனது உரையில், 15 ஆவது கேரள சட்டப்பேரவையின் 10 ஆவது கூட்டத்தொடரின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், கேரள மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றுவது எனக்கு பெருமை. இப்போது நான் கடைசி பத்தியை படிக்கிறேன்.

நமது மிகப்பெரிய பாரம்பரியம் கட்டடங்களிலோ நினைவுச் சின்னங்களிலோ அல்ல. அரசியலமைப்பின் விலைமதிப்பற்ற மரபுக்கு நாம் காட்டும் மரியாதை என்பதை நினைவில் கொள்வோம். கூட்டுறவு, கூட்டாட்சியின் சாராசம்தான் இத்தனை ஆண்டுகளாக நமது நாட்டை ஒற்றுமையாகவும் வலுவாகவும் வைத்திருந்தது. இந்த சாராம்சம் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்கச் செய்யச்சொன்ன ஆளுநர், அது முடிந்ததும் கிளம்பிச் சென்றார். இந்த நிகழ்வு மாநிலத்தில் பல்வேறு அமைப்புகளிடையே கண்டங்களை பெற்று வருகிறது.