இந்தியா

'இந்த 2 நிறுவனத்தின் செய்தியாளர்கள் தயவுசெய்து வெளியேறுங்கள்’ - கேரள ஆளுநர் சர்ச்சை பேச்சு

Abinaya

இரண்டு செய்தி சேனல்களின் பெயர்களை குறிப்பிட்டு, அந்த சேனலை சேர்ந்த செய்தியாளர்கள் இருந்தால், தயவு செய்து வெளியேறுங்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள ஆளுநர் ஆர்ஃப் முகமது கான் கூறியது சர்ச்சையாகியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் கேரள ஆளுநர் ஆர்ஃப் முகமது கான்.அப்போது கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் என்ற இரண்டு மலையாள செய்தி சேனல்களின் செய்தியாளர்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறும், அவர்களை சந்திக்க மாட்டேன் எனவும் கூறினார்.

முன்னதாக அக்டோபர் 24 அன்று, இந்த இரண்டு சேனல்களும் உட்பட நான்கு மலையாள சேனல்கள் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள ராஜ் பவன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் என்ற இரண்டு செய்தி சேனல்களின் பெயர்களை குறிப்பிட்டவர், அந்த சேனலை சேர்ந்த செய்தியாளர்கள் வெளியேறினால் தான் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்ஃப் முகமது கான், ‘ நான் ஊடகங்களை முக்கியமாவையாக கருதுகிறேன். ஆனால் இப்போது ஊடகங்கள் என்று மாறுவேடமிடுபவர்களை என்னால கையாள முடியவில்லை. அவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அரசியல் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு கட்சி சார்புடையவாராக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறி விடுங்கள். அவர்கள் இருந்தால் நான் கிளம்பிவிடுவேன், பேசமாட்டேன்.’’ என திட்டவட்டமாக பேசினார்.

கைரளி நியூஸ் என்பது ஆளும் சிபிஐ (எம்) கட்சியின் சேனலாகும். மேலும் மலையாள சேட்டிலைட் சேனலான மீடியா ஒன், பாதுகாப்பு அனுமதி பிரச்சனையில் மத்திய அரசின் தடையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தடையை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனத்தின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஒத்திவைத்தது. மார்ச் மாதம் வந்த இடைக்கால உத்தரவில், தற்போது சேனல் அதன் ஒளிபரப்பைத் தொடர அனுமதித்ததின் பெயரில் மீடியா ஒன் நிறுவனம் இயக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை ஆளும் சிபிஐ(எம்)-க்கும், பாஜக ஆளுநரான ஆர்ஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கை உறுதிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது இந்த சம்பவம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.