இந்தியா

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் அதிரடி நீக்கம் - கேரள அரசு நடவடிக்கை

JustinDurai

கேரளாவில் கலா மண்டலம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப்கானை அதிரடியாக நீக்கி உள்ளது கேரள அரசு.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில்  கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நீண்டநாட்களாக கருத்து மோதல் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்தது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரை அணுகுவோம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கேரள ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை நேற்று முன்தினம் (நவ.9) ஒப்புதல் அளித்தது. மேலும், அந்த பதவிக்கு நிபுணர் ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஆளுநருக்குப் பதிலாக ஒரு புகழ்பெற்ற நபரை வேந்தர் பதவியில் நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மாற்றியுள்ளதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார். மேலும், கலாச்சார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு எடுக்கும் முடிவுகளை கேரள கலாமண்டல நிர்வாகம் பின்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த மாநில ஆளுநர்கள் உள்ளனர். மாநில அரசின் பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. இச்சூழலில், சில மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவுவதால் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளில் கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிக்கலாமே: 'முடிந்தால் தாக்குங்கள்' கேரளாவில் முற்றும் ஆளுநர்-அரசுக்கு இடையிலான மோதல்: முழு தகவல்!