இந்தியா

முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஒரு வருடத்திற்கு கட்டாயம் - கேரள அரசு

முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஒரு வருடத்திற்கு கட்டாயம் - கேரள அரசு

webteam

முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கேரள அரசு ஒரு வருடத்திற்கு கட்டாயமாக்கியுள்ளது

இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் மற்ற மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. முதலில் பாதிக்கப்பட்டாலும் அடுத்தடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை கேரளா கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போதும் அங்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களை விட கேரளா கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது மீண்டும் கொரோனா பரவிவரும் நிலையில் கேரளா சில விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

அதன்படி முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கேரள அரசு ஒரு வருடத்திற்கு கட்டாயமாக்கியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒருமுறை அபராதம் செலுத்தியவர்கள் மீண்டும் மாஸ்க் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் ரூ.5000, அதன்பின்னும் சிக்கினால் ரூ.10000 என அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்கள், வேலை பார்க்கும் இடங்கள், சாலைகளில் பயணிப்பவர்கள் என அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், திருமண விழாவில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், அவர்களும் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், ஒன்று கூடல் இருந்தாலும் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.